உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர்,கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இன்று வாரணாசி மற்றும் ஜான்பூரில் 10க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் ஹவாலா பணம் களமிறக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்படுவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்த சோதனை சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமானவர்களை குறி வைத்து நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.