ரொக்கமாக ஒரு ஆண்டில் பெரிய அளவில் பரிவர்த்தனை செய்தால், வருமான வரித்துறையின் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
வருமான வரி ஏய்ப்பைக் கண்டறிய வருமான வரித்துறை பல்வேறு முன் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வங்கி டெப்பாசிட்டுகள், மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீடுகள், சொத்து பரிமாற்றங்கள் மற்றும் பங்குச்சந்தைகளில் அதிகளவு செய்யப்படும் முதலீடுகளில் ஆன்லைன் மூலம் கண்காணித்து வருகிறது.
இவற்றில் ஒருவர் செய்யும் முதலீடுகள் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் வருமான வரித்துறையிடம் தகவல் அளிக்க வேண்டும். அப்படி, தகவல் அளிக்காவிட்டால், சம்மந்தப்பட்ட நபருக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகின்றது.
சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கு அதிகமாக ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்தால், வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். நடப்பு கணக்கிற்கு இந்த வரம்பு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாயாக உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வங்கி டெப்பாசிட்டுகளில் ரொக்கமாக முதலீடு செய்தால், தகவல் அளிக்க வேண்டும்.
கடன் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு ரொக்கமாக செலுத்தப்படும் தொகை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் தகவல் அளிக்க வேண்டும். கடன் அட்டைகள் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை பரிவர்த்தனைச் செய்யப்பட்டால், வருமான வரித்துறைத் தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் 30 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், அதைப் பற்றிய தகவல்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படுகிறது. பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகளில் ரொக்கமாக செய்யப்படும் முதலீடுகளின் அளவு ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் தகவல் அளிக்க வேண்டும்.
அன்னிய செலாவணி விற்பனை மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை கிடைத்தால், வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். பான் எண் எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண், தற்போது பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.