கேரளாவில் கைதியால் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கேரள உயர்நீதிமன்றம் கேரள டிஜிபியை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப். பள்ளி ஆசிரியரான இவர் மதுவுக்கு அடிமையான நிலையில் அக்கம் பக்கத்தினருடன் தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சந்தீப்பை உடனடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் காலையில் கொட்டாரக்கரா அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் வந்தனா தாஸ், சந்தீப்புக்கு சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென சந்தீப் பயிற்சி மருத்துவர் வந்தனா தாஸை தாக்கியதுடன் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மருத்துவரின் உடலின் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த போலீசார் சந்தீப்பை பிடிக்க முயன்றபோது போலீசாரையும் அங்கிருந்த மற்ற மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கியுள்ளார். இதையடுத்து கொட்டாரக்கரா போலீசார் மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் சந்தீப்பை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து சென்றனர். கேரளாவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வந்தனா தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இச்சம்பவத்துக்கு காரணமான சந்தீப்புக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள உயர்நீதிமன்றம், சந்தீப்பின் செயல்பாடுகள் அசாதாரணமாக இருப்பது தெரிந்தும் ஏன் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடவில்லை; மருத்துவர் வந்தனா கொல்லப்பட்ட சம்பவம் கேரள அரசின் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஒட்டுமொத்த தோல்வியை காட்டுகிறது; போராடும் மருத்துவர்களுக்கும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் கேரள அரசு என்ன பதில் சொல்ல உள்ளது எனத் தெரிவித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கேரள டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.