ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியால், உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அதே போல் விமான நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத ஊதியத்தை வழங்காத காரணத்தால், இந்த விமான ஊழியர்கள் டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். மேலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து, விமான நிறுவனம் வழங்க வேண்டிய நிலுவை தொகையை பெற்று தர வேண்டும் எனவும், வேலையிழந்த பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து வேலையிழந்துள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் ஒவ்வொருவரின் பெயரையும் அவர்கள் தகுதியுடன் பிற நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் வகையில் பட்டியலிட்டு வருவதாகவும், இதற்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு வேலையிழந்தவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதே போல் இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வேலை வாய்ப்பு குறித்து பேசி வருவதாக கூறினார். ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு, இந்த நிறுவனங்கள் கணிசமான அளவில் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.