புதுச்சேரியை அடுத்த வில்லியனூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் மர்மநபர்கள் யாரோ காவித்துணியை போர்த்தியிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சென்று சிலைக்கு முன்பு அமர்ந்து சிலைக்கு காவி துண்டு அணிவித்தவரை தண்டிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மேற்குப்பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.ஆர். சிலையில் போடப்பட்ட காவித்துண்டை அகற்றிவிட்டு மாலை அணிவித்தனர். மேலும் வில்லியனூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆராய்ந்ததுடன் அருகிலுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். “தலைவர்களின் சிலைகளை அவமதிப்போர் மீது புதுச்சேரி அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.