மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய பேரணியின்போது வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 20க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும்; ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (03.02.2021) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதியாக நம்புவதாகவும், அரசு இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறிய உச்சநீதிமன்றம், மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்ததோடு அதை வாபஸ் பெற்றுக்கொள்ளவும், இந்தச் சம்பவங்கள் குறித்த விசாரணை தொடர்பாக மத்திய அரசை அணுகவும் அனுமதியளித்து உத்தரவிட்டது.
மேலும், ஊடகங்கள் போதிய ஆதாரம் இல்லாமல், போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் எனக் கூறக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.