புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு கால தாமதமாக அனுமதியளித்த நிலையில், 2022-2023 நிதி ஆண்டுக்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க எம்.எல்.ஏவுமான இரா.சிவா செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது பேசிய அவர், " புதுச்சேரி மாநிலத்தில் 2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு ஒன்றிய அரசு காலதாமதமாக அனுமதி அளித்ததால், பட்ஜெட் காலதாமதத்தோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை இந்த பட்ஜெட் காட்டுகிறது.
இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் அறிவித்திருக்கும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட் புதுச்சேரி மக்களை ஏமாற்றும் பூஜ்ய பட்ஜெட். இது புதுச்சேரி வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. தொழில்துறை, வியாபாரிகளுக்கு, சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட் புதுச்சேரி வளர்ச்சிக்கு பேராபத்தை தந்திருக்கிறது" என்றார்.