மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சி மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து மருத்துவர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின், ஜெயித்பூர் பகுதியில் நிமா என்ற தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, காயங்களோடு 2 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது, மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர், அவர்கள் இருவரும், மருத்துவர் இருக்கும் அறைக்கு சென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில், படுகாயமடைந்த அந்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மருத்துவரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யுனானி முறையில் சிகிச்சை அளித்த வந்த மருத்துவரின் பெயர் ஜாவித் அக்தர் என்பது தெரியவந்தது. மேலும், மருத்துவரை சுட்டுக்கொன்ற இருவரும் மைனர் சிறுவர்கள் என்பதும், நோயாளிகள் என்று கூறிக்கொண்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. நோயாளிகள் என்ற பெயரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.