கேரளா மாநிலம், கக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜூ (43). இவருக்குத் திருமணமாகி ஜீமா (38) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், தம்பதியர் இருவரும் பாலுச்சேரியில் இருந்து தங்களது வீட்டிற்குச் செல்வதற்காக கோழிக்கோடு வழியாக இருசக்கர வாகனம் மூலம் வந்துள்ளனர். இவர்களுக்கு முன்னே ஒரு பேருந்தும் பின்னே ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது டிராபிக் சிக்னல் போட்டதால், இவர்கள் முன்னே சென்ற பேருந்து திடீரென்று பிரேக் போட்டது. இதனைப் பார்த்த ஷைஜூ சுதாரித்துக் கொண்டு பிரேக் போட்டார். ஆனால், இவர்களுக்குப் பின்னால் அதிவேகத்தில் வந்த பேருந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால், தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர். மேலும், இந்த விபத்தில் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் உள்பட 6 பேரும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரும் காயமடைந்தனர்.
இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்தவர்கள் தம்பதியரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், தம்பதியர் இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலைத் தந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, மோட்டார் வாகனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தம்பதியர் பின்னால் வந்த இரண்டாவது பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.