மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் கடந்த 13ஆம் தேதி காலையில் ஒரு பெண்ணின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த தலையை கைப்பற்றி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரு பெண்ணின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், அந்த பெண்ணின் உடல் பாகங்கள் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பகல் தங்கா கிராமத்தைச் சேர்ந்த அட்டியூர் ரஹ்மான் லஸ்கர்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட அந்த பெண், அட்டியூர் ரஹ்மானின் சகோதரர் மனைவி என்பது தெரியவந்தது.
கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண்ணை, அட்டியூர் ரஹ்மான் காதல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அந்த பெண் ஏற்க மறுக்காததால், அவரை வலுக்கட்டாயமாக கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அந்த பெண்ணின் உடலை 3 துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தனது சகோதரரின் மனைவியை 3 துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.