உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 2ஆம் வகுப்பு மாணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்த குழந்தையின் தந்தைக்கு பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகெல் தகவல் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை, பள்ளி விடுதிக்குச் சென்று பார்க்கையில், அங்கு யாரும் இல்லாததால் இது குறித்து தினேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், ஆக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த குழந்தையின் தந்தை, போலீசார் இது குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் உதவியோடு, ஆக்ரோ நோக்கிச் சென்று குழந்தை செல்லப்பட்தாகக் கூறப்பட்ட அந்த காரை பின் தொடர்ந்து சதாபாத்தில் வழிமறித்தனர். அப்போது அந்த காரில், இறந்த நிலையில் குழந்தையின் உடல் இருந்தது. இதையடுத்து, பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகெலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், பள்ளி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவும், பள்ளிக்கு பெரிய அளவில் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் 2ஆம் வகுப்பு மாணவனை, நரபலி கொடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பள்ளி இயக்குநர் தினேஷ் பாகெல், அவரது தந்தை ஜசோதன் சிங் மற்றும் பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் சேர்ந்து இந்த நரபலியை கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு புகழ் கிடைக்க 2ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.