சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - காங்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் ஐஜி பஸ்தார் பி சுந்தர்ராஜ் கூறுகையில், “நாராயண்பூர் கன்கேர் எல்லை பகுதியில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் இன்று நக்சல்களுக்கும் டிஆர்ஜி நாராயண்பூர் மற்றும் எஸ்டிஎப் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 2 பெண்கள் உட்பட 7 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 16 ஆம் தேதி காங்கேர் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருந்தது. அதன் பின்னர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 29 நக்சலைட்டுகள் அதிரடியாக சுட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.