புதுச்சேரியில் 2017 ஆம் ஆண்டு விவேக் பிரசாத் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தனது முறையற்றத் தொடர்பு காரணமாக கணவரையே கொலை செய்த சம்பவம் சம்பவத்தில் ஆறாண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் பிரசாத். ஒப்பந்தத்திற்கு எடுத்து கட்டடங்கள் கட்டும் பணியை விவேக் பிரசாத் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயதி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். விவேக் பிரசாத்திடம் பாபு என்கின்ற ஷேக் பீர் முகமது என்பவர் ஓட்டுநராகவும் சூப்பர்வைசராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பாபுவிற்கும் விவேக் பிரசாத்தின் மனைவிக்கும் இடையே முறையற்றத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த விவேக் பிரசாத், மனைவியை எச்சரித்துள்ளார். இதனால் விவேக் பிரசாத்தை கொலை செய்ய மனைவி ஜெயதியும் பாபுவும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு மே மாதம் புதுச்சேரியில் உள்ள பூத்துறை பகுதியில் கட்டடப் பணிகளைப் பார்க்கச் சென்ற விவேக் பிரசாத்தை, பாபு கத்தியால் வெட்டிக் கொலை செய்து அதே பகுதியில் குழி தோண்டிப் புதைத்தார். மறுநாளே ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில், தன் கணவரைக் காணவில்லை என மனைவி ஜெயதி புகார் அளித்தார். புகார் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், விவேக் பிரசாத் கொல்லப்பட்டதையும் புதைக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர். அதன் பிறகு அவருடைய சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்பொழுது மனைவி ஜெயதி அங்கே வந்து ஒன்றும் தெரியாதது போல் கண்ணீர் விட்டு அழுது அங்கிருந்த அனைவரையும் நம்ப வைத்தார். ஆனால் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பாபுவுக்கும் ஜெயதிக்கும் ஏற்பட்ட முறையற்றத் தொடர்பு காரணமாக இருவரும் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.