கேரள மாநிலம் கண்ணூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அதே போல், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் சந்திக்கும் எல்லையான நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் வயநாடு மாவட்ட வனப்பகுதியிலும் மாவோயிஸ்ட் நடமாட்டங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு மாலை கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு அருகே உள்ள வாளத்தோடு டவுன் பகுதியில் திடீரென்று ஒரு பெண் உட்பட 5 மாவோயிஸ்டுகள் வந்திருந்தனர். மேலும், அவர்கள் தங்கள் கைகளில் துப்பாக்கியுடன் பேரணி நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு ஒரு நோட்டீஸையும் கொடுத்தனர். அந்த நோட்டீஸில், உலக வங்கியின் உத்தரவின் பேரில் ரேஷன் பொருட்களை நிறுத்தும் பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு அது தொடர்பான போஸ்டர்களையும் அந்த பகுதியில் உள்ள சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றனர். இப்படி, அவ்வப்போது பழங்குடியின கிராமங்களுக்கு சென்று அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி செல்வார்கள். வயநாடு மாவட்டத்தை ஒட்டி நீலகிரி மாவட்டம் உள்ளதால், அங்கு மாவோயிஸ்டுகள் உள்ளே நுழையாத வகையில், தமிழக அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வயநாடு - நீலகிரி எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகள் நுழைந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் அங்கிருந்த அரசு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்து அங்கிருந்த கணினி மற்றும் பொருட்களை சூறையாடினர். அதன் பிறகு, அந்த அலுவலகத்தின் சுவற்றில் கம்பமலை தோட்டம் பழங்குடியினர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சொந்தமானது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் எழுதிய போஸ்டரை ஒட்டி அங்கிருந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் (04-10-23) வயநாடு அருகில் உள்ள கம்பமலை பகுதிக்குள் 5 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் நுழைந்துள்ளனர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிரடிப்படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இது குறித்து மாவோயிஸ்டுகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட எஸ்.பி பிரபாகர் கூறுகையில், “நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை. அதே வேளையில், கேரளாவின் வயநாடு எஸ்டேட் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதால் நீலகிரி மாவட்ட பகுதியில் பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராம பகுதிகளில், காயத்துடன் யாரேனும் உள்ளே நுழைந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.