இந்திய அண்டை நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறது என்றும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தால் இந்தியா மறுக்காது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ரம்ஜான் பண்டிகை வரவிருப்பதால் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவேண்டாம் என இந்திய ராணுவம் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்கள் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. இந்திய நிலைகளின் மீதான இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும், பாகிஸ்தானின் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி அழித்தன.
இந்நிலையில், இருநாட்டு அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருந்தால், நாம் ஏன் அதை மறுக்கப் போகிறோம்? அண்டை நாடுகளுடன் நல்லுறவு மேம்படவே விரும்புகிறோம். ஆனால், அதற்கு பாகிஸ்தான் மட்டுமே முன்னெடுப்பைத் தொடங்கவேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தினர் நம் எல்லைகளை நோக்கி சுடுகின்றனர். அத்துமீறி தாக்குதல்கள் நடத்துகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவதற்கும் அவர்களே காரணமாகின்றனர். அவர்கள் இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்யவில்லை. ஆனால், ஒருநாள் சரிசெய்துதான் ஆகவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.