Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவா? ஜக்கி வாசுதேவ் விளக்கம்..!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018


ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ ஆதரவு தெரிவிக்கவில்லை என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஸ்டெர்லைட் குறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.

நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என அவர் தெரிவித்திருந்தார். ஜக்கிவாசுதேவின் இந்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

 

 

இந்நிலையில், தனது கருத்து சர்ச்சை ஏற்படுத்தியதை அறிந்த ஜக்கி வாசுதேவ், மீண்டும் ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதில், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.

சுற்றுப்புற பாதிப்பு தொடர்பான விதிமீறல்களை சட்டப்படி அணுக வேண்டுமே தவிர பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வணிகத்தை மூடுதல் உள்ளிட்ட செயல்கள் தேச நலனுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார்.