புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் தொடர் இந்த முறை மார்ச் மாதத்திலேயே ஆரம்பிக்கும். பட்ஜெட் தொடர்பான விவரங்களை அப்புறம் சொல்கிறேன்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்டாயத் திருமணம் செய்துள்ளது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்' என்ற கேள்விக்கு, ''எங்களுடைய கட்சி பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து இப்பொழுது ஆட்சி அமைத்திருக்கின்றோம். ஆட்சி சிறந்த முறையில் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அறிவித்த திட்டங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம். புதிதாக அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மேலும் பல்வேறுகட்ட திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாலைகள் எல்லாம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டணி விலகும் என்று சொன்னால் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்'' என்றார்.
அப்பொழுது மற்றொரு செய்தியாளர் 'நீங்கள் இருக்கும் வரை மாநில அந்தஸ்து வாங்க மாட்டீர்கள் என நாராயணசாமி விமர்சித்துள்ளார்' என்ற கேள்விக்கு, ''அவர் இருக்கும் போது வாங்கி இருந்தால் எனக்கு சந்தோசமாக இருந்திருக்கும். முன்னெல்லாம் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு இருந்தார் அல்லவா அப்பொழுது அவரே வாங்கி இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.