இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சமீபத்தில் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மணிப்பூருக்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து நேற்று நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் மணிப்பூர் தலைநகரம் இம்பாலில் நேற்று மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்திற்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக வெளியான தகவலுக்கு பைரேன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
At this crucial juncture, I wish to clarify that I will not be resigning from the post of Chief Minister.
— N.Biren Singh (@NBirenSingh) June 30, 2023