ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ரமேஷ் என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “கல்கத்தாவில் இருந்து 3.20 மணியளவில் ரயில் கிளம்பியது. 6.30 மணியளவில் பாலசோர் தாண்டிய பின்பே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான் ஏசி 2 டையர் கோச்சில் இருந்தேன். நான் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் கேபிள் வயர்கள் அறுந்து விழுந்து எரிய ஆரம்பித்தது. அதன் பின் ரயில் குலுங்க ஆரம்பித்தது. இருக்கைகளில் உட்கார்ந்தவர்கள் எல்லாம் கீழே விழுந்தனர். நாங்களும் கீழே விழுந்தோம். எங்கும் மரண ஓலம். எல்லோரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனச் சொன்னார்கள். நன்றாக குலுங்கி ரயில் தடத்தை விட்டு இறங்கி நின்றுவிட்டது. சிறிய விபத்துதான் நாங்கள் காப்பாற்றப்பட்டோம் என நினைத்தோம்.
அதன் பின் எல்லோரும் தங்களது உடைமைகளை வெளியே எடுத்தனர். ரயிலுக்கு வெளியே வந்து பார்த்ததில் தான் மிகப்பெரிய விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது. ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றும் தூக்கி எறியப்பட்டும் இருந்தது. அதில் அதிகமானோர் இடிபாடுகளில் இருந்தனர். பக்கத்தில் இருந்த கிராம மக்கள் எல்லாம் வந்து ரயில் பெட்டிகளில் இருந்த கண்ணாடிகளை உடைத்து மக்களை மீட்க முயற்சித்தார்கள். உடலெல்லாம் நசுங்கி பரிதாபமாக இருந்தது. உள்ளூர் மக்கள் மிக உதவினார்கள். ஆம்புலன்ஸ் 7.15க்கு வந்தது. ஆம்புலன்ஸ் மட்டுமின்றி ஆட்டோ போன்ற வாகனங்களில் கூட ஆட்களை ஏற்றிச் சென்றனர். விமானத்தில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே வந்துள்ளோம். மீதமுள்ளவர்கள் எல்லோரும் தொழிலாளர்கள். அவர்கள் புவனேஷ்வரத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பேருந்து பிடித்து அங்கிருந்து சென்னைக்கு வருவதாகத் திட்டமிட்டுள்ளனர்” என்றார்.