பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாகச் செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெள்ளி பதக்கத்தை வென்றார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தாயகம் திரும்பிய மாரியப்பனுக்கு டெல்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்பொழுது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூரை சந்தித்து வாழ்த்துபெற இருக்கிறார் மாரியப்பன். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பன், ''இந்தமுறை தங்கம் மிஸ்ஸாகிவிட்டது. அடுத்தமுறை தங்கம் வென்றுவிடுவேன். தமிழ்நாடு முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளேன். க்ளாஸ் ஒன் வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். எனக்கு முன்பு ஒலிம்பிக்சில் கலந்துகொண்ட எல்லோருக்கும் க்ளாஸ் ஒன் வேலை கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.