2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி உட்பட பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள், பூஜ்ஜிய பட்ஜெட் என இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், வரியை அதிகரித்து ஒரு பைசாவைக்கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; வரி விகிதத்தில் எந்த குறைப்பையும் கொண்டுவரமுடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் சில நேரங்களில் வரி குறைக்கப்படும். சில நேரங்களில் மக்கள் அதற்காக காத்திருக்க வேண்டும். இந்தாண்டு வரியை அதிகரித்து ஒரு ரூபாயைக் கூட சம்பாதிக்க நான் முயலவில்லை. கடந்த வருடமும் அவ்வாறு செய்ய முயலவில்லை.
நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், தொற்றுநோய் காலத்தில், மக்கள் மீது வரி சுமையை சுமத்தக்கூடாது என பிரதமர் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார். பணவீக்கம் பற்றிய எங்கள் பார்வையில் கோல் மால் இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, சாமானியர்கள் சிரமங்களை சந்திப்பார்கள்தான். ஆனால் சமையல் எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ள உடனடியாக செயல்பட்டு இறக்குமதி வரிகளை குறைத்தோம். பணவீக்கம் நிலையான அடிப்படையில் 6 சதவீத இலக்கை தாண்டவில்லை.
ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். அதற்கு வெளியே உள்ள அனைத்தும் தனிநபர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்களாகும். அந்த சொத்துக்களின் பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி விதிக்கிறோம். எவையெல்லாம் கிரிப்டோ, எவையெல்லாம் கிரிப்டோ சொத்துக்கள் என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் பற்றிய விவரம் ஆலோசனைக்கு பிறகு வெளியாகும்.
ஒவ்வொரு கிரிப்டோ சொத்துக்களின் பரிவர்த்தனையிலும் 1% டிடிஎஸ் விதிப்பதன் மூலம் பணத்தின் தடத்தையும் நாங்கள் கண்காணிக்கிறோம். கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான தகவல்களுக்காக மற்ற நாடுகளுடன் வங்கிக்கணக்குகள் வாரியாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.