
சத்தீஸ்கர் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், கபிர்தாம் மாவட்டத்தில் உள்ள பரஸ்வாரா கிராம பஞ்சாயத்தில் 11 வார்டுகளில் 6 பெண்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கவுன்சிலராக பதவி ஏற்கும் விழா நேற்று முன் தினம் (03-03-25) நடைபெற்றது. இந்த விழாவின் போது, வெற்றி பெற்ற 6 பெண் கவுன்சிலர்களுக்குப் பதிலாக அவர்களது கணவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு, பஞ்சாயத்து செயலாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பெண் கவுன்சிலர்களுக்குப் பதிலாக அவர்களது கணவன்மார்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை கேலிக்கூத்தாக்குவாதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கூறி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பண்டாரியா தொகுதியின் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி தலைமையில் விசாரிணை நடத்த கபிர்தாம் மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி அஜய் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.