கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் விபின் குப்தா என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து வாங்கிய நிலையில் விபினை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் விபின் தனது மனைவியிடம் ஏ.டி.எம் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றவர் அப்படியே காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட அவரது மனைவி, எனது கணவனை காணவில்லை. போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார் விபினின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது, அவரது செல்போனில் சிம் கார்டு மாற்றப்பட்டு, வேறு ஒரு சிம் போடப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சிம்கார்டை ஆய்வு செய்தபோது, விபின் நொய்டாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நொய்டாவில் உள்ள ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது விபின் நொய்டாவில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வெளியே வருவதகை கண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அவரை பெங்களூரு அழைத்து வந்த போலீசார், கணவர் காணாமல் போனது குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். அதில் விபின், “எனது மனைவி திருமணமாகி விவகாரத்து பெற்றிருந்தாலும் அவரை திருமணம் செய்துகொண்டேன். இருவருக்கும் 8 மாத குழந்தை ஒன்று உள்ளது. எனது மனைவி என்னைச் சுதந்திரமாக இருக்க விடவில்லை. சாப்பிடும் போது ஒரு துளி உணவு கீழே சிந்தினால் கூட சத்தம் போடுகிறார். நான் ஆடை அணிவதில் கூட கட்டுப்பாடு விதிக்கிறார். எனது மனைவியின் விருப்பப்படியே நான் ஆடை உடுத்த வேண்டும். தனியாக வெளியே செல்ல முடியாது. அதிலிருந்து தப்பிப்பதற்குத்தான் நான் நொய்டா தப்பித்து வந்தேன். அவக்கூட என்னால் வாழமுடியாது. என்னைச் சிறையில் கூட தள்ளுங்கள். ஆனால் எனது மனைவியுடன் மட்டும் சேர்த்து வைக்காதீர்கள்” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் தனது மனைவி என்னைக் காணவில்லை என்று சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்ததால் மாட்டிக்கொள்வோம் என்று மொட்டை அடித்து வேறு தோற்றத்திற்கு மாறியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே விபினின் குற்றச்சாட்டுகள் பொய் என்று அவரது மனைவி விளக்கமளித்திருக்கிறார்.