அண்மையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சோதனை நடந்தது. இதனால் டெல்லி அரசியலில் பூகம்பம் வெடித்தது. சில நாட்கள் முன்பு தனது கட்சி எம்.எல்.ஏ களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளையும் பாஜக செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது அன்னா ஹசாரே விமர்சனங்களை வைத்துள்ளார். இது தொடர்பாக அன்னா ஹசாரே எழுதி உள்ள கடிதத்தில், 'டெல்லி முதல்வராக பதவி ஏற்ற பிறகு லோக் ஆயுக்தா, லோக்பாலை கெஜ்ரிவால் முற்றிலும் மறந்துவிட்டார். டெல்லி அரசின் மதுபான கொள்கை குறித்து வேதனைப்படுகிறேன். இப்படி ஒரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை. சட்டசபையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டுவர முயற்சி செய்யவில்லை. டெல்லியில் மூலை முடுக்கெல்லாம் மதுபான கடைகள் முளைத்து விட்டது. பேரியக்கத்தில் விளைந்த ஒரு கட்சிக்கு இது அழகா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.