பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த அவர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி சென்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்று நிதிஷ் குமாரை சந்திப்பதற்காக அமித்ஷா பீகார் சென்றுள்ளார். பாட்னாவில் இன்று மதியம் அவர் நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார். இதையொட்டி அமித்ஷாவுக்கு நிதிஷ்குமார் மதிய விருந்து அளித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்திருந்தது. 2009 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் 25 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 15 தொகுதிகளில் போட்டியிட்டு 11 இடங்களில் வென்றது.
2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது ஐக்கிய ஜனதா தளம். இதில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தது.
அதன் பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார். இந்த நிலையில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறார்.