ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
1976ம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு முதல் முறையாக அலுவல் பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. மக்களவை உறுப்பினர்கள் 20 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என 30 பேர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இக்குழு அதன் 11ஆவது அறிக்கையை சமர்ப்பித்தது. 112 பரிந்துரைகளை அந்த அறிக்கை கொண்டிருந்தது.
அந்த பரிந்துரைகளாவன:
ஐஐடி, ஐஐஎம் எய்ம்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா நவோதயா வித்யாலயா மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட இதர மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத இடத்தில் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிக்கலாம். அங்கும் படிப்படியாக ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி வழியில் கற்பித்தால் மட்டுமே இந்தியை பொது மொழியாக மாற்றமுடியும்.
பணியாளர்கள் தேர்வுக்கான வினாத்தாளில் ஆங்கிலம் கட்டாயம் என்ற முறையை நீக்க வேண்டும். ஆங்கிலத்திற்கு பதில் இந்தியில் கேள்வித்தாளை தயாரிக்க வேண்டும். அரசுப்பணிகளில் சேர இந்தி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். இந்தியை பயன்படுத்தாத அரசு அதிகாரிகளை எச்சரிக்க வேண்டும். உயர்நீதிமன்ற விசாரணைகள் மற்றும் உத்தரவுகள் இந்தி மொழியில் இருக்க வேண்டும்.
ஐநா அமைப்பில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை மாற்ற வேண்டும். அரசு நிகழ்ச்சிக்காக அச்சிடப்படும் அழைப்பு மற்றும் உரைகள் இந்தியில் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாக்கப்படாமல் அதனை பொதுமொழியாக்க முடியாது.
அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்த பரிந்துரைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினையும் கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.