Skip to main content

கலைக்கப்படும் மம்தாவின் அரசு?

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Recommend dissolution of Mamata government in West Bengal

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிர்ஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடந்துவருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

இது குறித்து விசாரிக்க சந்தேஷ்காலி கிராமத்திற்கு சென்ற தேசிய மகளிர் ஆணையம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாலும், காவலர்களாலும் அப்பகுதியில் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு கவனக் குறைவாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. 

இதையடுத்து தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் மற்றும் உறுப்பினர்கள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணை அறிக்கை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் நேற்று(16.2.2024) ஒப்படைக்கப்பட்டது.  அந்த அறிக்கையில் சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது. அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்