சமீப காலமாகப் பிரபலங்கள் பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆளுநரின் கவனத்திற்குச் சென்றதும் தன்னுடைய சமூக வலைத்தள கணக்கின் மூலம் யாராவது பணம் கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பணம் பறிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இந்த போலி சமூக வலைத்தள கணக்குகளை நீக்கும்படி இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை ஹிமாச்சல பிரதேச போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாநிலத்தின் ஆளுநர் ஒருவரின் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.