கரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என கடந்த நவம்பர் மாதமே சுகாதரத்திற்கான நாடளுமன்ற குழு கணித்து வெளியிட்டிருந்தது. இதனை மத்திய அரசு பொருட்படுத்தாமல் இருந்ததன் காரணமே மோசமான நிலையை தற்போது நாடு சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தொடங்க இருப்பதையும் அதன் விளைவுகளையும் சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த நவம்பரில் அறிக்கையாக தாக்கல் செய்திருந்தது.
சமாஜ்வாதி கட்சி ராஜ்கோபால் தலைமையிலான 31 எம்.பி.க்கள் அடங்கிய நிலைக்குழு தமது அறிக்கையை கடந்த நவம்பர் 21ஆம் தேதி மாநிலங்கவை தலைவரிடமும் 25 ஆம் தேதி மக்களவை சபாநாயகரிடமும் அளித்துள்ளது. இதை தொடர்ந்து 190 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவல் மேலாண்மை என்ற இந்த அறிக்கையில் கரோனாவை எதிர்கொள்வதில் நாட்டிற்கு உண்டான பலம், பலவீனம் , வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்டவை விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக நாட்டில் கரோனா இரண்டா அலை ஏற்படும் என கணித்திருந்தது. இரண்டாவது அலையின் விளைவுகள் இது வரை நாடு சந்திக்காத வகையில் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கரோனாவின் தாக்கலில் ஐரோப்பிய நாடுகள் சிக்கி சீரழிந்தது போன்று இரண்டாம் அலையின் போது இந்தியால் மோசமான நிலை ஏற்படும் என அறிக்கையில் எச்சரித்து இருந்தது தெரிய வந்துள்ளது. இரண்டாவது அலையை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டிய கட்டாயம் குறித்தும் நாடளுமன்ற நிலைக்குழு விரிவாக விளக்கியிருந்தது.
கரோனா முதல் அலையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இரண்டாவது அலையை எதிர்கொள்ள வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகள் என்பன போதுமான அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வரும் காலங்களில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக பெரிய கூட்டங்கள் கூடுவதை கட்டாயம் தடுக்க வேண்டும் என நிலைக்குழு அப்போதே பரிந்துரை செய்தது. நாடெங்கும் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள மாநிலங்களை கண்டறிந்தும் அங்கு உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதர வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. சுகாதார பணிகளுக்கு போதுமான நிதிகளை ஒதுக்கீடு செய்வது அவசியம் என்று கூறிய நாடளுமன்ற நிலைக்குழு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளில் ஒருங்கிணப்பு இல்லாததை சுட்டிக்காட்டி அவற்றை கலைய வேண்டியது அவசியம் என தெரிவித்திருந்தது. ஆனாலும் நிலைக்குழுவின் இந்த முக்கியதுவம் வாய்ந்த அறிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்ட பிரச்சனைக்களுக்கான தீர்வு காண மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுகாதரத்திற்கான நிலைக்குழுவில் இடம்பெற்ற எம்.பி’க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாகவே கரோனா 2வது அலை நாட்டையே புரட்டுப்போட்டிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.