விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்தால் அவர்கள் அலட்சிமான மனநிலைமைக்கு மாறிவிடுவார்கள் என ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி குறித்த அம்சங்கள் இடம்பெறவில்லையே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "எங்களுடைய தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது, எங்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, அவர்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் செய்கிறோம். விளைபொருள்களுக்கான விலையை நாங்கள் அதிகப்படுத்தியுள்ளோம். விவசாயத்தை லாபகரமாக செய்வதற்கு நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மக்கள் ஒரு விஷயத்தை இலவசமாக பெற்று பழகினால், அப்போது அவர்கள் அலட்சியமாக மாறிவிடுவார்கள். அதுபோல தான் விவசாய கடன் தள்ளுபடியும்" என கூறினார். விவசாயிகள் குறித்த இவரின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.