மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹர்டிக் படேல் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
படேல் சமுதாய மக்களின் ஆதரவை பெற்ற ஹர்டிக் படேல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹர்டிக் படேலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விஸ்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஹர்டிக் படேல் தன் மீதான தண்டனையை வாபஸ் பெற வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அவரது தண்டனையை ரத்து செய்ய முடியாது என கூறியுள்ளனர். இதன் காரணமாக இந்த தேர்தலில் ஹர்டிக் படேலால் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹர்டிக் படேல் நேரடியாக போட்டியிட்டால் அது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலமாக இருக்கும் எனவும், எனவே இந்த நிகழ்வு காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக அமையலாம் எனவும் சமூகவலைதளங்களில் கருத்து பதியப்பட்டு வருகிறது.