உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 02.07.2024 அன்று ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 121 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசம் அலிகர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மொத்தம் 26 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்கட்டமாக அலிகர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்தித்து அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதியை அவர் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் 'தேவையான நீதியும் பெற்றுத் தரப்படும். அதற்கும் தான் உறுதியுடன் இருப்பேன்' என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட உறவினர்களின் குடும்பத்தாருக்கு ராகுல்காந்தி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.