எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், விவசாயிகள் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு மசோதா- 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மசோதா- 2020 ஆகிய இரு மசோதாக்களையும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், இரு மசோதாக்களையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இன்றே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் மாநிலங்களவை பா.ஜ.க. எம்.பிக்கள் அனைவரும் இன்று மாநிலங்களவைக்கு தவறாமல் வர வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார்.
விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் ஏற்கனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.