68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் வசமாகியுள்ளது. இதுகுறித்து டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் ரத்தன் டாடா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஏர் இந்தியாவே மீண்டும் வருக...வரவேற்கிறேன். பழைய நிலையை மீண்டும் கொண்டுவருவோம். ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கிய மத்திய அரசின் கொள்கை முடிவை வரவேற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசின் விமான நிறுவனமாக செயல்பட்டுவந்த ஏர் இந்தியா, இந்திய விமான சேவையில் மகாராஜா என வலம்வந்தது. தனியார் விமான நிறுவனங்களின் வருகையால் ஏர் இந்தியா இழப்பைச் சந்திக்கத் தொடங்கியது. அண்மையில் அந்நிறுவனத்தின் இழப்பு ரூபாய் 70,000 கோடியைத் தொட்ட நிலையில், ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. எனினும், ஓராண்டாக அதன் விற்பனை சாத்தியப்படாமல் இருந்த நிலையில், டாடா குழுமமே மீண்டும் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டியது.
இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் குழு நடத்திய ஆலோசனையில் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியாவை விற்பதற்கான நடைமுறை இறுதி செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை ரூபாய் 18,000 கோடிக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது.
இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு முன் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா, தற்போது மீண்டும் அந்நிறுவனத்திடமே வந்து சேர்ந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் விற்கப்பட்டாலும், அந்நிறுவனத்தின் கட்டடங்கள் உள்ளிட்ட ரூபாய் 14,718 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் அரசின் வசமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது பணியாற்றுவோர், ஓய்வுபெற்றோரின் நலன்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த விற்பனை இவ்வாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.