Skip to main content

குஜராத்தில் பாஜகவை கலாய்த்து ட்ரெண்டான ‘வேடிக்கையான வளர்ச்சி’!

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
குஜராத்தில் பாஜகவை கலாய்த்து ட்ரெண்டான ‘வேடிக்கையான வளர்ச்சி’!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் ‘வேடிக்கையான வளர்ச்சி’ திட்டங்களை சமூக வலைதளங்களில் கலாய்க்கும் பதிவுகள் ட்ரெண்டாகியுள்ளன.



குஜராத்தின் வளர்ச்சியை உற்றுநோக்கியபோது..!

குஜராத் மாடல் என்ற பெயருடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து பிரதமர் பதவியிலும் அமர்ந்தவர் மோடி. இந்த குஜராத் மாடல் என்ற விளம்பரம் கேலிக்கூத்தாகியிருப்பதாக நாடுமுழுவதும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. குஜராத் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் ‘வேடிக்கையான வளர்ச்சி’ திட்டங்களை சமூக வலைதளங்களில் கலாய்க்கும் பதிவுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

கடந்த இரண்டு வாரங்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பிரபலமான சமூக வலைதளங்களில் #vikas_gando_thayo_chhe - வேடிக்கையாகிப்போன வளர்ச்சி ஹேஸ்டேக் தாங்கிய பதிவுகள் ட்ரெண்டாகியுள்ளன. இந்தப்பதிவுகளில் கனமழையில் பள்ளமாகிப்போன சாலைகள், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் பொய்யாகிப்போனது, நூறாண்டுகளைக் கடந்த பேருந்துகள், குப்பை குவியல்களாகக் கிடக்கும் மாநிலத்தின் முக்கிய வீதிகள், வெள்ளம் பாதித்த தெருக்கள் மற்றும் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர் போன்றவற்றின் புகைப்படங்களும், வீடியோக்களும் இடம்பெற்றிருந்தன. அத்தனையும் விகாஸ் - மேம்பாடு என்ற பெயருடன் பதிவிடப்பட்டவை.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் தரப்பு ஐடி விங்க், தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸைச் சேர்ந்த சரல் பட்டேல், இது மிகப்பெரிய வெற்றிபெற்றிருக்கிறது. பாஜக ஆதரவாளர்களும் இதனை பகிர்வதுதான் வேடிக்கையான விஷயம் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பெரும்பான்மையான இளைஞர்களை எளிதில் அடைந்துவிடும் இதுமாதிரியான பதிவுகளைக் கண்டு பாஜக தரப்பு கலங்கிப்போயுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்