Skip to main content

மேலும் ஒரு பாலியல் வழக்கு; ரேவண்ணாவுக்கு ஜாமீன் மறுப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nm

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இதில் குற்றத்தின் தீவிரத்தை கருதி ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அவருடைய வீட்டில் பணிபுரிந்த பெண்கள் உட்பட பல பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பியது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வழக்கும், மைசூர் கே.ஆர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையம் ஒரு வழக்கும் என  மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் குறித்து கர்நாடக அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை உருவாக்கி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா  ஒரு மாதம் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒவ்வொரு வழக்கிலும் மூன்று முறை போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் பதிவான வழக்கிலிருந்து ஜாமீன் வேண்டுமென நேற்று மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது. இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் அடிப்படையில் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஜமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. மூன்று வழக்குகள் இருக்கும் சூழ்நிலையில் நேற்று புதிதாக ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதால் ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க நேரிடும். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணங்களை காட்டி ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிபதி முன்பு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தை கருதி பிரஜ்வல் ரேவண்ணா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது. 

Next Story

94,737 மது பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
94,737 bottles of liquor destroyed by road roller

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் ஒன்றாக சேர்த்து கிடங்கில் வைத்திருந்தனர்.

அந்தப் பாட்டில்கள் ரோடு ரோலர் வாகனம் கொண்டு உடைத்து அழிக்கப்பட்டது. சுமார் 94,737 மது பாட்டில்கள் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். மது பாட்டில்கள் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு ரோடு ரோலர் வைத்து நொறுக்கப்பட்டு அழிக்கப்படும் அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.