Skip to main content

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ - தமிழக அரசு முக்கிய தகவல்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
TN Govt Important Information for kalaignar Women Rights Project  

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் புதிதாகக் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. 

TN Govt Important Information for kalaignar Women Rights Project  

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ - சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்