உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை ரெயில்வே எஸ்.பி தொடங்கி வைத்தார்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ரயில் நிலைய நடை மேடைகள் மற்றும் வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா, லட்சமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பாலமுருகன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில் “போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி திருச்சி ரெயில் நிலையம் மட்டும் இன்றி திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 மாவட்டங்களிலும் நடைபெற்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் 3 ரெயில்வே உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.