18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குதிரைப்படை வீரர்களின் பாரம்பரிய அணிவகுப்பு முறைப்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் செங்கோல் ஏந்தி வழி நடத்தி சென்றார்.
இதனையடுத்து திரௌபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகின் மிகப்பெரிய தேர்தல். ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகால கால வாக்குப்பதிவுகளின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 தசாப்தங்களாக காஷ்மீரில் குறைந்த வாக்குப்பதிவைக் கண்டது. ஆனால் காஷ்மீர் இந்த முறை இந்தத் தேர்தல் அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தது.
6 தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டில் முழுமையான பெரும்பான்மையுடன் 3வது முறையாக நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் மூன்றாவது முறையாக இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்குத் தெரியும். இந்த மக்களவை அவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியும் என்று. 18 வது மக்களவை பல வழிகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை ஆகும். நாட்டின் அரசியலமைப்பின்படி வரவிருக்கும் அமர்வுகளில் இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் பெரிய பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பயனுள்ள ஆவணமாக இருக்கும். சமூக மற்றும் பல வரலாற்று சாதனைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. நாட்டில் பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் மோதல் போக்குகள் இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 11 வது இடத்தில் இருந்து 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது. உலகின் சில பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இந்தியா இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடிந்தது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாகக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மணிப்பூர், மணிப்பூர் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.