கேரளா தலைநகரமான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இன்று (28-ம் தேதி) 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார். மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 47வது வார்டான முடவன்முகில் வார்டியில் போட்டியிட்ட மா.கம்யூனிஸ்ட் ஆர்யா ராஜேந்திரன், வெற்றி பெற்றார். மேலும் இந்தத் தேர்தலில் 53 வார்டுகளை கம்யூனிஸ்ட்டும், 35 வார்டுகளை பா.ஜ.க.வும், 10 வார்டுகளை காங்கிரசும் கை பற்றியது.
21 வயதான ஆல் செயின்ட் கல்லூரி இரண்டாம் ஆண்டு கணிதத்துறை மாணவி ஆர்யா ராஜேந்திரனை திருவனந்தபுரம் மேயராக மா.கம்யூனிஸ்ட் மாவட்ட கமிட்டி தேர்ந்தெடுத்தது. இதற்கான முறைப்படி மேயர் தேர்தல் பாளையத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி செயலாளர் தலைமையில் இன்று காலை நடந்தது. இதில் 54 வாக்குகளை ஆர்யா ராஜேந்திரன் பெற்றதையடுத்து முறைப்படி மேயராக பதவியேற்று கொண்டார். அவருக்கு மாநகராட்சி செயலாளர் பதவி பிரமாணம் செய்து வைத்து மேயர் ஆடையை (மேல் கோட்) அணிவித்தார்.
அப்போது, அரங்கத்தில் இருந்த கவுன்சிலர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கைதட்டி ஆரவாரத்தை எழுப்பினார்கள். தொடர்ந்து அவர்கள் முன்னிலையில் பேசிய மேயர் ஆர்யா ராஜேந்திரன், “இளம் வயதில் பெரிய பொறுப்பை கம்யூனிஸ்ட் பார்ட்டி எனக்கு கொடுத்திருக்கிறது. அதை சிறப்பாக செய்வேன். மேலும் இளைஞர்களும் மாணவர்களும் ஜனநாயகத்தோடு இணைந்துள்ள அரசியலை அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக 27-ம் தேதி ஆர்யா ராஜேந்திரன், தனது வார்டுக்குட்பட்ட மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வாழ்த்துக்கள் பெற்றார். தொடர்ந்து மா.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநகராட்சியின் துணை மேயராக சி.பி.ஐ.யின் சார்பில் போட்டியிட்ட பட்டம் வார்டு கவுன்சிலர் பி.கே ராஜீ தேர்ந்தெடுக்கட்டார்.