இந்தியாவின் அதிவேக ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து வாரணாசி வரை செல்லும் இந்த ரயில் சேவை நேற்று பிரதமரால் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளுடன் டெல்லியிலிருந்து வாரணாசி சென்றடைந்த அந்த ரயில் மீண்டும் டெல்லி திரும்பும்போது பாதி வழியில் பழுதாகி நின்றது. இதனால் அதில் வந்த பயணிகள் வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டு டெல்லி அனுப்பப்பட்டனர். இந்தியாவின் அதிவேக ரயில் முதல் பயணத்திலேயே பழுதானது ரயில்வே துறைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, "வந்தே பாரத் ரயில் டெல்லி வரும் போது டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் பழுதானது. இன்று அதிகாலை 5 மணி அளவில் ரயிலில் உள்ள சில பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சாம்ரோலா ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க முடியவில்லை. இதனால் 10 கி.மீ. வேகத்தில் ரயில் மெதுவாக இயக்கப்பட்டு அருகில் உள்ள ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரயிலில் இருந்து புகையும், கருகிய நெடியும் வந்தது. இதன்மூலம் ரயிலின் பிரேக் சிஸ்டம் பழுதடைந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ரயிலை சரி செய்யும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது' என கூறினார்.