தெலுங்கானா மாநிலம், காவடிகுடா பகுதியைச் சேர்ந்தவர் சல்லா கலாவதி. இவருக்கு நிதின், கோபி என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், 32 வயதான நிதின், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர்களுடன், கலாவதியின் தாயார் கோதை சுசீலா என்பரும் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நிதின் தனது தாய கலாவதியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்ததால், தனது பாட்டிக்கு தொந்தரவு கொடுப்பேன் என்று நிதின் மிரட்டியுள்ளார். இதனை பெரிதுபடுத்தாத, கலாவதி கீழே தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து நிதின், நாற்காலியில் அமர்ந்திருந்த தனது பாட்டியை இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து கீழே தூக்கி எறிந்துள்ளார்.
உடனடியாக, கலாவதியின் உறவினர் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்த போது, படுகாயமடைந்த பாட்டி ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். இதனை தொடர்ந்து, இது குறித்து ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த துணை மருத்துவர்கள், பாட்டி சுசீலாவை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கலாவதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் தனது மகன் நிதின், தனது தாயை வேண்டுமென்றே கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிதினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.