தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதை வரவேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்’ எனக் குறிப்பிட்டு ஆரம்பித்துள்ளார். அதில், “நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடைசூழ நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.
நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் பாராளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும்,தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் பாராளுமன்றத்திற்குள் ஒலித்திருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வை கொண்டது. அன்று பாடியது பாராளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது.
யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்றுப் புகழ் சேர்த்திருக்கிறது. இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பாரதப் பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.