புதுச்சேரி மாநிலத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூபாய் 9,000 கோடிக்கு மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதல் வழங்கியதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மானிய கோரிக்கைகளின் விவரங்கள் துறை ரீதியாக முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என்றும், ஆளுநர் உரையைக் கால தாமதமாக அனுப்பியதாக கூறி கிரண்பேடி பட்ஜெட் உரையாற்றுவதற்கு வர மறுப்பு தெரிவித்தார்.
ஆனால், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே கூட்டத்தொடர் தொடங்குவதால் ஜனநாயக முறைப்படி ஆளுநர் பங்கேற்கலாம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதற்கு கிரண்பேடி, "பட்ஜெட்டிற்கு முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவையை ஏன் கூட்ட வேண்டும் என்று கேள்வி எழுகிறது, யூனியன் பிரதேச சட்டப்படி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு, வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவை கூட்டினால் ஆளுநர் உரை அளிப்பதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்காத சூழலில் தெரியாத அறிக்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கமுடியும்," என்றும் கேள்வி எழுப்பினார்.
அதேசமயம் புதுச்சேரி சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர் 20.07.2020 காலை 9.30 மணிக்கு கூடியது. பேரவை தொடங்கி 10 நிமிடங்கள் வரை காத்திருந்தும் கிரண்பேடி வராததால் சட்டப்பேரவை நிகழ்வை தொடங்கிய சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்பதை சுட்டிக்காட்டி பேரவையின் அடுத்த நிகழ்வான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறி பேரவையை ஒத்திவைத்தார். அதன்பின்னர் 12 மணியளவில் மீண்டும் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூபாய் 9000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்ததுடன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரி வரலாற்றில் ஆளுநர் உரை இல்லாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை. அதனைதொடர்ந்து 3 நாட்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கிரண்பேடி உரையாற்றுவார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன் வருடாந்திர நிதிநிலை அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை வழங்குவதற்கான ஒப்புதல் கோரும் உத்தேச திட்டம், புதுச்சேரியின் நிதித்துறையிலிருந்து 21.7.2020 மாலை முதலமைச்சர் மூலம் பெறப்பட்டது. அதையடுத்து மாண்புமிகு துணைநிலை ஆளுநர் 24.7.2020 அன்று காலை 09.30 மணிக்கு சட்டமன்ற சபையில் உரையாற்றுவதற்கான அழைப்பு கடிதம் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடமிருந்து 22.7.2020 அன்று பெறப்பட்டது. அதையடுத்து சட்டசபையில் உரையாற்றுவதற்கான அழைப்பை துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சகம் வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில், சட்டமன்றத்தின் முன் வருடாந்திர நிதி அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை ஆகியவற்றிற்கான தனது பரிந்துரையை மாண்புமிகு துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.