புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை இயக்குநர் அலுவலகங்கள், தலைமை செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி மக்கள் குறைகேட்பு கூட்டங்களை நடத்தி மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தலைமை செயலாளர் அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் ஏராளமான பொதுமக்கள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். பொதுமக்கள் அனைவரும் தனித்தனியாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தங்களின் குறைகளைக் கூறினர். தங்களது புகார்களை பலமுறை அரசு அலுவலகங்களில் கொடுத்தும் நிறைவேற்றப்படாததால் ஆளுநரைச் சந்தித்து தங்களின் புகார்களையும், குறைகளையும் கூறியதாகவும், அதை உடனடியாக தீர்த்து வைப்பதாக ஆளுநர் தமிழிசை உறுதியளித்துள்ளதாகவும், அவரை சந்தித்து விட்டு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.