Skip to main content

கரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு - உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

supreme court

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, மத்திய - மாநில அரசுகள் நிதிச் சுமையில் இருப்பதாலும், நிதி பற்றாக்குறையாலும் கரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என தெரிவித்தது.

 

ஆனால் உச்சநீதிமன்றம்,  தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குவது கட்டாயம் என தெரிவித்ததோடு, கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

 

இந்தச் சூழலில் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கலாம் என பரிந்துரை செய்தது.

 

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று (04.10.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கலாம் என்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இந்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

இறப்பு சான்றிதழில் இறப்புக்கான காரணம் கரோனா என குறிப்பிடப்படாவிட்டாலும், கரோனாவால்தான் ஒரு நபர் இறந்தார் என உறவினர்கள் நிரூபித்தால், இறந்த நபருக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும், இறப்புக்கான காரணத்தை சரியாக பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஆர்டிபிசிஆர் சோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்ட நபர், 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும், இழப்பீட்டு தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், அத்தொகை இறந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்