உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
மேலும், லக்கிம்பூருக்குச் செல்ல அனுமதி கோரிய ராகுல் காந்தி தலைமையிலான ஐவர் குழுவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தி உட்பட மூன்று பேர் மட்டும் லக்கிம்பூர் செல்ல மீண்டும் காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து உத்தரப்பிரதேச அரசு, ராகுல் காந்தியுடன் மேலும் மூவர் லக்கிம்பூர் செல்ல அனுமதியளித்தது.
இதனையடுத்து ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் தற்போது டெல்லியிலிருந்து விமானத்தில் லக்னோ புறப்பட்டுள்ளனர். லக்னோவிலிருந்து அவர்கள் லக்கிம்பூர் செல்லவுள்ளனர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்திக்கும் லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேச அரசு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.