ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியத் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் சுந்தர் பிச்சை.
உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.
இந்த ஊரடங்கில் தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் சுந்தர் பிச்சை. தன்னார்வ அமைப்பான 'கிவ் இந்தியா' அமைப்புக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ள தினக் கூலிகளுக்கு உதவிய கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளது.
நடுத்தர வணிகத்தினர், தொழிலாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சுந்தர் பிச்சை கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காரணமாக வறுமையில் தவித்துவரும் ஏழை மக்களுக்கு உதவ இதுவரை இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக கிவ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.