கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணி போட்டியில் வெல்வதற்கும் இரு உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்த யுவராஜ் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். இருந்தும் புற்றுநோய்க்கு முன்பு இருந்த ஆட்டம் வெளிப்படாததால் 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் சிங் கோவா மாநிலத்தில் மோரிஜிம் அருகே வர்ச்சவாடாவில் காசா சிங் என்றொரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார். தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத்துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் டிசம்பர் 8 ஆம் தேதி யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று கோவா சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது. யுவராஜ் சிங் ஆஜராகி முறையாக விளக்கம் தரவில்லை எனில் விதிமீறல் குற்றத்திற்காக அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.