கோவாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி கோவா காங்கிரஸ் கட்சி, ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், 15 நாட்களில் பாஜக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காவிட்டால் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தது. இது கோவா அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கோவா மாநில பாஜக தலைவர், அந்த அமைச்சரின் பெயரை வெளியிடும்படி சவால் விடுத்ததுடன், அவ்வாறு காங்கிரஸ் வெளியிட்டால் அந்த அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தாங்கள் அளித்த 15 நாட்கள் அவகாசம் முடிவடைந்ததையடுத்து காங்கிரஸ் கட்சி, கோவாவின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மிலிந்த் நாயக்தான் அந்த அமைச்சர் என்றும், அவர் தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அமைச்சருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நடைபெற்ற குறுஞ்செய்தி உரையாடல் எனக் கூறி சில பிரிண்ட்-அவுட்களையும், அமைச்சரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் பேசியது எனக் கூறி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டது.
மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, காவல்துறையிடம் புகாரும் அளித்தது. இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் பெயரை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே மிலிந்த் நாயக் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த வழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.